“ஆட்டிசம்” விழிப்புணர்வு நாள் ஏப்ரல்-2


ஆட்டிசம் என்பது என்ன?


மூளையின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டு பேச்சு மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ தன்னைச் சுற்றியுள்ள உலகத்துடன் தொடர்பு கொள்ள இயலாது செய்யும் ஒரு குறைப்பாடு. பிறந்த மூன்று வருடங்களுக்குள் தென்படத் துவங்கும். ‘ஆட்டிசம்’ என்ற இந்தக் குறைப்பாட்டிற்கு உடல் ரீதியான அறிகுறிகள் கிடையாது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் சுற்றி இருக்கும் எதைப்பற்றிய சிந்தனையுமே இல்லாது தங்களுக்கென்று ஒரு தனி உலகத்தை உருவாக்கிக் கொண்டு அதில் அமிழ்ந்து கிடப்பார்கள். இன்னதென்று வகைப்படுத்த இயலாத பல வித அசாதாரணமான பாதிப்புகளை உண்டாக்கும் ‘ஆட்டிசம்’ மருத்துவரீதியாக ஒரு Spectrum Disorder என அழைக்கப்படுகிறது. தூய தமிழில் இது தற்புனைவு ஆழ்வு என குறிப்பிடப்படுகிறது


ஆட்டிசத்தின் தன்மை :


தொடர்புகொள்ளும் ஆற்றல்கள் இல்லாமை


ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தொடர்பு கொள்ளும் ஆற்றல்கள் இல்லாதவர்கள். இவர்களில் பெருன்பான்மையோர் பேசும் திறன் அற்றவர்கள். பேச்சு மற்றும் முகபாவங்கள், சைகைகள் மூலம் தங்கள் எண்ணைங்களை உணர்த்துவதற்கோ, அல்லது மற்றவர்கள் உணர்த்துவதை புரிந்து கொள்ளவோ இயலாதவர்கள் எனபது குறிப்பிடத்தக்கது.


விளையாட்டிற்கான திறனோ ஆர்வமோ இல்லாமை


சாதாரணமாக விளையாட்டின் மீது குழந்தைகளுக்கு இருக்கும் ஆர்வமும் கற்பனை திறனும் ஆட்டிசம் உடைய குழந்தைகளிடம் காணப்படுவதில்லை. தன்னை ஒரு மிருகமாகவோ, பறவையாகவோ பாவித்துக் கொண்டு அவற்றின் நடை, உடை, பாவானைகளை விளையாட்டில் புகுத்தி மகிழும் (Pretend Play) கற்பனைத் திறன் இல்லாதவர்கள் இவர்கள். புலனியக்க ஒருங்கிணைப்பில் உள்ள கோளாறினால் (DISORDER OF SENSORY INTEGRATION)சிறிதும் சலிப்படையாமல் தொடந்து ஒரே மாதிரியான விளையாட்டுகள், அங்க அசைவுகளில் இந்த குழந்தைகள் ஈடுபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூகவாழ்வுக்கு தேவையான ஆற்றல்கள் இல்லாமை


இந்த குறைபாடு உள்ள குழந்தைகள் சம வயது உடைய குழந்தைகளுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டு அதை மேலும் வளர்க்கும் வழிமுறைகளை அறியாதவர்களாக இருப்பார்கள்.

ஆட்டிசத்தினால் பாதிக்கப்படுபவர்கள் யார்?


இன, மத, மொழி வேறுபாடுகள் இன்றி மக்களைப் பீடிக்கும் ‘ஆட்டிசம்’ பெண்களை விட ஆண்களையே பெரும்பாலும் பாதிக்கிறது. குடும்ப வருமானம், வாழ்க்கைத்தரம், கல்வி என்ற எந்த பாகுபாடும் அதற்கு கிடையாது. இன்று சுமார் 20 லட்சம் இந்தியர்கள் ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. Down’s Syndrome என்ற மூளை வளர்ச்சி சம்பந்தப்பட்ட குறைப்பாட்டை விடவும் . ‘ஆட்டிசம்’ பரவலாக காணப்படுகிறது என்றாலும், பல துறைகளிலுள்ள படித்தவர்கள் கூட ‘ஆட்டிசம்’ பற்றியோ, அந்தக் குறைப்பாடுகள் உள்ள நபர்களை கையாளும் முறை பற்றியோ அறியாதவர்களாக இருக்கிறார்கள். அறிகுறிகளை கவனித்து முறையான பரிசோதனைகளுக்குப் பின் அதற்கான சிகிச்சை முறைகளின் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்விற்கு வழி செய்வது பற்றி யாரும் எண்ணிப்பார்ப்பதில்லை.ஆட்டிசத்தின் அறிகுறிகளை கண்டறிதல்


ஆரம்பக் கட்டத்திலேயே ‘ஆட்டிசம்’ இருப்பதை பரிசோதித்து கண்டறிதல் சிகிச்சைக்கும், மறுவாழ்வு திட்டங்களை மேற்கொள்வதற்கும் மிக அவசியமானது. மற்ற நோய்களைப் போல் படிபடியாக ஆராய்ந்து அறிய உதவும் முறையான பரிசோதனைகள் மற்றும் உடல்ரீதியான அறிகுறிகள் ஆட்டிசத்திற்கு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு குழந்தை நடந்து கொள்ளும் விதத்தை வைத்து அதற்கு இருக்கும் அல்லது இல்லாத சில தன்மைகளை கவனித்து தான் ‘ஆட்டிசம்’ இருப்பது உறுதி செய்யப்படுகிறது.

ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் அறிகுறிகள்:


 தனிமையைவிரும்புதல்

 எளிமையான செயல்களை திரும்ப திரும்ப செய்தல் (எடுத்துகாட்டு)- கை தட்டுதல் , முன்னும் பின்னும் நகர்தல்

 தாம் பயன்படுத்தும் பொருட்களில் தொடர்ந்து ஒரே விதமான செயல்களையே செய்தல்

 நமது எந்த ஒரு செயலுக்கும், பேச்சுக்கும் பதில் செயல் செய்யாமல் இருப்பது.

 பிறரை நேருக்குநேர் பார்ப்பதை தவிர்த்தல்

 மற்றவர்கள் இருப்பதைப் பற்றிய உணர்வு இல்லாமை

 மொழி வளர்ச்சியில் ஏற்படும் தாமதம்

 பேச்சுதிறனை வளர்த்துக் கொள்வதில் தோல்வி (எடுத்துகாட்டு)- தனக்கு தேவையானவற்றை கேட்டு பெற முடியாமை

 தன்னிடம் சொல்லப்பட்ட சொற்களை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டு இருத்தல்

 தன்னிடம் உள்ள பொருட்களை வித்தியாசமான முறையில் திரும்ப திரும்ப ஏதேனும் செய்தல் (எடுத்துகாட்டு)- சுற்றுதல், வரிசைப்படுத்துதல்

 உடல் செய்கைகளில் மாறுபட்ட தன்மை

 சிறுநீர், மலம் கழிக்க பயிற்சியளிப்பதில் சிரமம்

 மற்ற குழந்தைகளுடன் கூடி விளையாடாமை

 மொழி வளர்ச்சியின்மை